• முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
  • திண்டிவனத்தை அடுத்த கோனேரி குப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடக்கவிழாவில் பேசிய கவர்னர்.
  • இளைஞர்களுக்கான பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட டாக்டர் சின்னைய்யா அவர்கள் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்களை நீக்க பரிசிலிப்பதாக அறிவித்தார்.
  • சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அய்யா தற்போதைய சூழலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக கூறினார்.

அய்யா பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்யா பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 நவம்பர், 2010

எங்களை நம்பவைத்து கருணாநிதி கழுத்தறுத்துவிட்டார் - டாக்டர் ராமதாஸ்

  • வியாழன், 25 நவம்பர், 2010
  • போராளி


  • "வன்னியர்-அந்நியர் எனப் பிரித்துப் பேசி மீண்டும் சாதி ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டீர்களே?"
    "இது தவறான குற்றச்சாட்டு! வன்னியர் சங்கத்தைத் தொடங்கியபோதே, இரண்டு முக்கியமான குறிக்கோள்களை நாங்கள் வைத்தோம். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. ஆதிதிராவிட சமுதாயத் துக்கு இப்போது 18 சதவிகித இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அதை 22 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. 1980 முதல் 89 வரை சுமார் ஒன்பது ஆண்டு காலம் நாங்கள் நடத்திய அனைத்து மாநாடுகளிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்கள் கலந்துகொண்டன. அருந்ததியினருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் தீர்மானத்தைத்தான் கலைஞர் இன்று நிறைவேற்றி இருக் கிறார். அதேபோல், முஸ்லிம், கிறிஸ்துவர் தனி ஒதுக்கீடு வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கைதான்.

    இப்படி, ஒடுக்கப்பட்ட இனங்களின் குரலாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி இயங்கி வருகிறது. நாங்கள் பேசுவது குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தவும் வளப்படுத்தவும்தானே தவிர, மற்ற சமூகங்களை எதிர்த்து அல்ல!"

    "20 ஆண்டுகளுக்கு முன்னால் வன்னியர்களுக்கு முதல்வர் கருணாநிதி இட ஒதுக்கீடு செய்துகொடுத்தார். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லையா? இன்னும் ஒதுக்கீடு வேண்டும் என்கிறீர்களே?"

    "சிலருக்குக் கல்வி கிடைத்தது. சிலருக்கு வேலை கிடைத்தது. சிலர் பொருளாதாரத்தில் முன்னேறினார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக வன்னியர் சமூகத்தின் வாழ்க்கைத் தரமே உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஆக்கி 20 சதவிகிதத்தை வழங்கிய முதல்வர் கலைஞர், அதை வன்னியருக்கு மட்டும் தரவில்லை. ஒட்டுமொத்தமாக, 109 சாதிகளுக்குத்தான் அந்த 20 சதவிகிதம் தரப்பட்டுள்ளது. இன்றைக்குப் பல சாதிகள், 'எங்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கின்றன. இந்நாட்டின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு இல்லை என்பது எங்களது வருத்தம்.

    அண்டை மாநிலங்களில் சாதி இடஒதுக்கீட்டை 'கம்பார்ட்மென்ட் சிஸ்டம்' எனத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். ஆறு, ஏழு தொகுப்புகள் உண்டு. அப்படிப் பிரிக்கவே நான் சொன்னேன். ஆனால், வன்னியர் களோடு 109 சாதிகளைத் திட்டமிட்டு கலைஞர் சேர்த்தார். இது சமூக நீதி அல்ல. பெரியாரின் கை பிடித்து வளர்ந்ததாகச் சொல்லும் கலைஞர் இதை உணர வேண்டும்!"

    "தேர்தலுக்குத் தயாராகிவிட்டதா பா.ம.க?"
    "நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். தேர்தல் களத்தைப் பார்த்து பா.ம.க பயந்ததே இல்லை!"

    "காங்கிரஸ் - விஜயகாந்த் - பா.ம.க. மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?"

    "அப்படித்தான் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்."

    "அப்படி முயற்சி எடுக்கப்பட்டால், விஜயகாந்த்துடன் இணைய மனரீதியாக நீங்கள் தயாராகிவிட்டீர்களா?"


    "அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை!"


    "தி.மு.க, அ.தி.மு.க. அல்லாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று நீங்கள் சொல்லிவருவது இதை மனதில் வைத்துத்தானா?"

    "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பது என் அபிப்பிராயம் அல்ல. சில மூத்த காங்கிரஸ் காரர்களின் கருத்தே அதுதான். என்னிடம் நேரிலும் தொலை பேசியிலும் பேசும் காங்கிரஸ் சீனியர்கள், '40 ஆண்டு காலமாக தி.மு.க, அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் தோள்களிலும் மாறி மாறி ஏறி தேர்தல் திருவிழாவைப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், இங்கு மட்டும் முடியவில்லையே' என்று வருத்தப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். விரும்பியதை என்னிடம் சொல்கிறார்கள். அதை மக்களுக்கு நான் சொன்னேன்."

    "தி.மு.க - அ.தி.மு.க. அல்லாத ஆட்சிக்கு சாத்தியம் இருக்கிறதா?"

    "காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாறுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது!"

    "கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு அணிகளிலும் இருந்துவிட்டீர்கள். கசப்பான அனுபவம் உங்களுக்கு அதிகமாக உண்டு. இரண்டு அணிகளுமே வேண்டாம் என்று முடிவெடுக்க முடியுமா?"

    "இவர்கள் இருவருமே வேண்டாம் என்று தனியாக நிற்கக்கூடிய சூழல் வந்தால், அதற்கும் பா.ம.க. தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். நாங்கள் அதையும் எதிர்கொள்ளத் தயார்!"


    "கருணாநிதி மீதான கோபம் உங்களுக்குக் குறைந்து இருக்கிறதா?"

    "எங்களை நம்பவைத்து கருணாநிதி கழுத்தறுத்துவிட்டார். அன்புமணிக்கு ராஜ்ய சபா ஸீட் தருகிறேன் என்று சொல்லிச் சொல்லியே ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. இன்றைக்கு 96 எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க-வுக்கு இருக்கிறார்கள் என்றால், அதில் 40 தொகுதிகளை பா.ம.க. தயவு இல்லாமல் கருணாநிதி ஜெயித்திருக்க முடியுமா? கருணாநிதி முதல்வராக ஆகியிருக்க முடியுமா? இன்றைக்கு சிவப்பு விளக்கைச் சுழலவிட்டு அதிகாரம் பண்ணும் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகிய ஆறு பேரும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற யார் காரணம்? பா.ம.க-வின் வாக்குகள் இல்லாமல் இவர்களால் ஜெயித்திருக்க முடியுமா?

    9 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா ஸீட், 6 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா ஸீட் தரும் முதல்வர் கலைஞர், 17 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் பா.ம.க-வுக்கு ஏன் தர மறுக்கிறார்? எங்களின் 17 பேர் ஓட்டு போட மறுத்திருந்தால், அவரால் மேல்சபையைக் கொண்டுவந்திருக்க முடியுமா? நான் செய்த ஒரே தப்பு, மேல் சபைக்கு 17 பேர் ஓட்டு போடச் சொன்னபோது, 'அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட்' என்று கலைஞரிடம் எழுதி வாங்கியிருக்க வேண்டும். கலைஞரின் ஏமாற்று வேலையை உணராமல் போய்விட்டேன்.

    எப்போது நாங்கள் பேசினாலும், தருகிறேன், தருகிறேன் என்பதைத் தவிர மறு பேச்சு பேசவில்லை கலைஞர். ஒருமுறை கோ.க.மணியிடம், 'நான்தான் தர்றேன்னு சொல்லிட்டேன்ல... அப்புறம் ஏன் அதையே பேசுறீங்க!' என்று கலைஞர் சொன்னார். உடனேயே கலைஞருக்கு போன் செய்து, நான் நன்றி சொன்னேன். இப்படிக் கழுத்தறுப்பார் என்று நினைக்கவில்லை. ஆனால், அவர் செய்தது வரலாற்றுப் பிழை என்பதை வரும் காலத்தில் உணர்வார்!"

    "அன்புமணிக்கு ஸீட் தராமல் விட்டதற்கு வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"

    "ஆரம்பத்தில் அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால், எங்கள் எம்.எல்.ஏ-க்கள் கலைஞரைச் சந்தித்தபோது, 'அன்புமணிக்கு எதற்காகக் கேட்கிறீர்கள்?' என்று ஸ்டாலின் கேட்டு இருக்கிறார். அதாவது, அன்புமணி டெல்லிக்குப் போகக் கூடாது என்பதே அவர்களது நோக்கம்!"

    "பா.ம.க-வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் உள்ளேயே பலமான லாபி இருக்கிறதே?"



    "இரண்டே இரண்டு அமைச்சர்கள்தான் இந்த வேலையைப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பா.ம.க-வைச் சேர்க்க வேண்டும், பா.ம.க. இருந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும் என்று சொல்லிவருவதும் எனக்குத் தெரியும்."
    "உங்களுக்கு எங்கு எல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளை எல்லாம் நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்கள். அதனால் கூட்டணிக்கு என்ன பயன் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே?"

    "எங்கள் கட்சிக்கு 75 தொகுதிகளுக்கு மேல் வலுவான வாக்கு வாங்கி உள்ளது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களும் தி.மு.க. கூட்டணியில் 31 இடங்களும்தான் தரப்பட்டன. செல்வாக்கு உள்ள அத்தனை தொகுதிகளையும் தந்துவிடவில்லை. அப்படியானால், மற்ற இடங்களில் அவர்கள்தானே வெற்றி பெறுகிறார்கள். எனவே, இது தவறான வாதம்!"

    "உங்களது சமீப காலப் பேச்சுக்களில் கருணாநிதி மட்டுமே தாக்கப்படுகிறார். ஜெயலலிதா, விஜயகாந்த்தைத் தவிர்க்கிறீர்களே?"

    "ஆளும் நாற்காலியில் யார் உட்கார்ந்திருக்கிறார்களோ, அவர்களைத்தானே விமர்சிக்க முடியும். என்றைக்கும் பொறுப்பான எதிர்க் கட்சியாக பா.ம.க செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் அளவுக்கு சட்டசபையிலும், வெளியிலும் தி.மு.ககூட ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று சூராதி சூரர்களைப்போலப் பேசுபவர்கள் அன்று பேச நடுங்கிப் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஆளும் அணியில் இருந்தாலும் நடுநிலை விமர்சனங்களை நாங்கள் விடவில்லை. அதனாலேயே கூட்டணியைவிட்டுத் துரத்தப்பட்டோம். எனவே, ஆளும் கட்சியை விட்டுவிட்டு எதிர்க் கட்சிகளை விமர்சிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அரசியல் அபத்தம்!" - கோபமாக முடிக்கிறார் ராமதாஸ்!